சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட ஓர் இலக்கிய வகையாகக் குறுநாவல் அமைகிறது. அதனால் குறுநாவல் என்பது நாவலின் சுருங்கிய வடிவமோ, நீண்ட சிறுகதையோ ஆகாது. அது ஒரு தனித்த இலக்கிய வகை. ஒரு கருத்தை மையமாகக் கொண்டு, அதை விளக்குவதற்கு ஏற்ற சில மாந்தர்களையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு வாழ்க்கையின் ஒர் பகுதியை அடிப்படையாக வைத்துக் குறுநாவல் படைக்கப்படும்.
சிறுகதையைப் போல் ஒரு மையத்தை உடையதாக, ஒருமைப்பாட்டு உணர்வுடன் குறுநாவல் அமையும். குறுநாவல் படிக்கும் வாசகருக்கு, வாழ்க்கையின் ஒரு காட்சியை மட்டும் விளக்காமல், ஒரு பகுதியை அறிந்து கொண்ட அனுபவ நிறைவு ஏற்படும். இந்த இடத்தில்தான் குறுநாவலின் விளக்கம் கிடைக்கிறது.
முழுமையான வாழ்க்கையும் அல்லாமல் ஒரு காட்சி மட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஒரு பகுதியைக்காட்டுவது குறுநாவல். நாடகத்தில் முழு நாடகமும் அல்லாமல் ஒரு காட்சியுமல்லாமல் இடைப்பட்ட ஓரங்க நாடகமென்ற வகை ஒன்று உள்ளது.
சில காட்சிகளைக் கொண்டு ஓர் அங்கத்தில் அமைவது ஓரங்க நாடகம் அதைப்போல ஒரு கருத்தை அல்லது ஒரு சிக்கலைச் சற்று விரிவாகக் காரணகாரியங்களுடன் விளக்கி அதற்குரிய தீர்வையும் காட்டுவதாகக் குறுநாவலின் கதை அமையும்.
அதற்கேற்றவாறு கதைமாந்தர்கள், கால, இடப்பின்னணி, நிகழ்ச்சிகள் வைப்புமுறை, சிறிய கதைப்பின்னல் என்பன அமையும். சிக்கல், அதற்கான காரணம், அதனால் விளையும் விளைவு, அதற்குரிய தீர்வு என்பவற்றை மையமிட்டுக் குறுநாவல் கதையமைப்பு படைக்கப்படும்.
படித்து முடிக்கும் வாசகருக்கு முழுமையும் மனநிறைவும், கருத்தின் வலிமையும், அது சரியாகச் சொல்லப்பட்டுள்ள திறமும் தெரியவரும். இதுதான் குறுநாவல் ஏற்படுத்தும் விளைவு
குறுநாவல் பத்திரிக்கைகளில் இடம் பெறுவதற்காக ஏற்பட்ட இலக்கிய வகை அதனால் பத்திரிகையின் பக்கங்களை நிரப்பும் பக்கநிரப்பி என்று புரிந்து கொள்ளக் கூடாது.பத்திரிகையில் இடம் பெறாமல் நேரடியாக, புத்தக வடிவில் வெளிவரும் குறுநாவலும் உள்ளது. எனவே இது ஒரு இலக்கிய வகை; வாய்ப்புக் கிடைக்கும்போது பத்திரிகையிலும் இடம்பெறும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக்க அளவு, படிக்கும் நேரம் என்பவற்றைக் கொண்டு சிறுகதை. குறுநாவல் ஆகியவைகளுக்கு இலக்கணம் கூறுவது பொருத்தமற்றது. வாசிப்பு வேகம் ஒருவருக்கொருவர் மாறுபடும் தன்மை உடையது. எனவே குறிப்பிட்ட கால அளவில் படித்து முடிக்கக் கூடிய அடிப்படையில் குறுநாவலை விளக்க முடியாது. தமிழில் குறுநாவல்கள் குறைவாகவே (நாவல், சிறுகதைகளோடு ஒப்பிடும்போது ) உள்ளன. அது மிகச் செறிவாகவும், நுணுக்கமாகவும் உள்ள இலக்கிய வடிவம். குறுநாவல் எழுதுவது கடினமான செயல், எனவே, அதைப் படைப்பவர் குறைவு என்று நாம் கொள்ள வேண்டும். மாறுபட்ட தனித்தன்மையுடைய ஓர் இலக்கிய வகை என்ற அளவில் நாம் அதைத்தெரிந்து கொள்ள வேண்டும்.
குறுநாவலின் கூறுகள்
குறுநாவலும் அடிப்படையில் ஒரு கருத்தைக் கதையின் வடிவில் வெளிப் படுத்துவது. எனவே, இதிலும் கரு முதன்மையானது. மாறுபட்ட ஒரு கருத்து, வித்தியாசமான ஓர் உணர்வு, ஒரு சிக்கல், கதை மாந்தர் ஒருவரின் பண்பு நலனில் ஒரு கூறு என்பவற்றைக் கருவாக அமைத்து அதை நுட்பமாகவும் அழுத்தமாகவும் வெளியிடுவது குறுநாவல்.
இதை விளக்குமாறு, நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக வைத்துக் கதைப்பின்னல் உருவாக்கப்படும். நாவலைப் போல முதன்மைக் கதைப்பின்னல் (Major Plot), துணைக் கதைப்பின்னல் (Sub Plot) என்பன குறுநாவலில் இட டம் பெறா. கருவை விளக்கும் ஒரு கதைப் பின்னலே அதில் அமையும்.
கருவையும் கதைப் பின்னலையும் விளக்கும் வண்ணம் கால, இடப் பின்னணி அமையும். இடத்தைக் குறிக்கும் விரிவான வருணனைகளுக்குக் குறுநாவலில் இடமில்லை. தேவையான அளவு கோட்டோவியம் போல இடப்பின்னணி அமையும். அதுபோலவே காலமும் கருத்தை விளக்கும் அளவு இடம்பெறும். படிக்கும் வாசகர் அதோடுஒன்றி, மனத்தில் அவைகளைக் காட்சிப்படுத்திக் கொண்டு குறுநாவல் படிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் கதை கூறும் எடுத்துரைத்தல் (Narration) முறையும் மிக நுட்பமாக அமைய வேண்டும். பொதுவாகச் சொற்களை விரயம் செய்வது, படைப்பிலக்கியத்தில் ஆகாத ஒன்று. நம்மரபில் செல்லும் சொல்வல்லான் என்று சொற்களை முறையாகப் பயன்படுத்துவது பற்றிக் கூறுவதைக் குறுநாவல் மொழி பற்றிய கருத்திற்கும் கொள்ள வேண்டும்.
சிறுகதை, நாவல் போலக் குறுநாவலும் பல்வேறு கதை கூறும் உத்திகளைக் கொண்டது. படர்க்கைக் கூற்றில் ஆசிரியர் கூறுவதாகவும், தன்மைக் கூற்றில் கதை மாந்தர் கூறுவதாகவும் நோக்குநிலை அமையும், கதைக்கு ஏற்றமுறை என்று அதன் கருதான் முடிவு செய்யும். பின்னோக்கு, நனவோடை, நாட்குறிப்பு, மடல் என்று தேவையானகதை கூறும் உத்திகளைக் குறுநாவலில் பயன்படுத்துவர்.
குறுநாவலின் இந்தக் கூறுகள், படைப்பாக்கத் திறனை வளர்த்துக் கொள்ள நமக்கு உதவும். நல்ல தரமான குறுநாவல்கள் பல தமிழில் உள்ளன. அவைகளைப் படித்துத் திறனாய்வு செய்ய நாம் முயல வேண்டும்.
குறுநாவலின் வகைகள்
குறுநாவல் பெரும்பாலும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. தமிழில் சிறுகதை. நாவல் அளவிற்குக் குறுநாவல் எண்ணிக்கையிலும் தரத்திலும் மிகுதியாகத் தோன்றவில்லை: சமூகம் தவிர்த்த வரலாறு, புராணம் போன்ற அடிப்படைகளில் குறுநாவல் எழுதப்படவில்லை. குறுநாவலின் வடிவத்திலும் கதை கூறும் உத்திகளிலும் புதிய சோதனை முயற்சிகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு குறுநாவலை வகைப்படுத்துவது ஏற்புடையதாக இருக்கும். பெரும்பாலும் நமக்குக் கிடைத்துள்ள குறுநாவல்கள் தனிமனித, சமூக, குடும்பப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
குறுநாவலின் வடிவம் வரையறுத்ததாகவும், மிகச் சுருங்கிய அளவிலே வாழ்க்கையைக் காட்டும் தன்மையுடையதாகவும் உ உள்ளது. எனவே, பிரச்சினைகளைக் காட்டி அதனால் விளையும் பாதிப்பைச் சொல்லுவதிலே படைப்பாசிரியர்கள் கவனம் செல்லுகிறது.
உணர்ச்சிகரமாகவும், கருத்தியல் நிலையிலும் வாசகருக்குக் குறுநாவலின் உள்ளடக்கத்தைச் சித்திரிப்பதே தன்நோக்கம் என்று எண்ணுகின்றனர். எனவே வகைப்படுத்துவதில் இந்த அடிப்படைகளை நாம் மனங்கொண்டால் போதுமானது.
குறுநாவல் படைப்பது மிகவும் இடர்ப்பாடனது என்று முன்னர்க் கண்டோம். சிறுகதையைப் போல மிகச் செறிவாகவும், சொற்களை எண்ணிப்பார்த்து, விரயமில்லாமல் பயன்படுத்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது தேவையாகிறது. திறனாய்வு செய்வோர் நாவல், சிறுகதை அளவிற்குக் குறுநாவல் வகையைக் கவனிக்கவில்லை.
குறுநாவலின் வரைவிலக்கணம் கூட நம்முடைய திறனாய்வு நூல்களில் இடம்பெறவில்லை. படைப்பாற்றலை மிக நன்றாக வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வடிவம் குறுநாவல்.
